Sunday, February 28, 2021

இந்தியா இந்தோனேஷியாவின் “PASSEX” என்ற கடற்படை பயிற்சி

 


  • இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை “PASSEX” என்ற பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி அரபி கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சி மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை பலம் பெரும் என்று நம்பப்படுகிறது.
  • இந்தியாவின் கப்பலான “INS Talwar” மற்றும் இந்தோனேஷியாவின் “KRI Bung Tomo” இந்த பயிற்சியில் ஈடுபட்டது.

Labels:

2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது!

 


2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! 

2019ஆம் ஆண்டிற்கான விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

நூல் ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன்,வைகைச்செல்வன், எழுத்தாளர் ஆவடிக்குமார், இசைக்கலைஞர்கள் குருசரண், அக்கரை சகோதரிகள், ஆச்சாள்புரம் சின்னதம்பி, திருநாகேஸ்வரம் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடக நடிகர்கள் மா.வீ.முத்து, T. ராஜேந்திரன், பரதநாட்டிய ஆசிரியர்கள் முரளிதரன், சியாம் சுந்தர், வில்லிசைக்கலைஞர் எஸ்.பி.முத்துலெட்சுமி, தெம்மாங்கு பாடகர் தங்கவேலு ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

இசை நாடக நடிகர்கள் கிருஷ்ணப்பா, பி.எஸ்.முத்துக்கிருஷ்ணன், நடிகர் ராமராஜன், யோகிபாபு, இயக்குநர் லியாகத் அலிகான், நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, இசையமைப்பாளர் தினா, பாடலாசிரியர் காமகோடியன், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, பின்னணி பாடகர்கள் அனந்த், சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட 59 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சரோஜா தேவி, திரைப்பட பாடகி பி.சுசீலா, நாட்டிய கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் எஸ். ராஜேஸ்வரிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

நாடக நடிகர் வீ.மூர்த்தி, திரைப்பட நடிகை பசி சத்யா உள்ளிட்ட 5 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

 

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, சமய சொற்பொழிவாளர் கே.கல்யாணராமன், கதையாசிரியர் செந்தூர் பாண்டியன், நூல் ஆசிரியர் பனப்பாக்கம் சுகுமார், எழுத்தாளர் அரசு பரமேசுவரன், இசைக்கலைஞர்கள் ஜான் மோகன், முருகபூபதி, திருப்பனந்தாள் எஸ்.மாரிமுத்து, டி.ஆர். சுந்தரேசன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

பரதநாட்டிய கலைஞர்கள் ஜனார்தனன், கவிதா சார்லஸ், கரகாட்டக் கலைஞர் பழனியம்மாள், மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ், இசை நாடக நடிகர்கள் வி.எம்.முருகப்பா, கே.ஆர். எம். இந்திரா உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திரைப்பட நடிகர்கள் சிவகார்த்திக்கேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், மதுமிதா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் காதல் மதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வசனகர்த்தா வி. பிரபாகர், சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மற்றும் நடிகரான ரவி மரியா உள்ளிட்ட 65 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சௌகார் ஜானகி, இசைக்கலைஞர் ஜமுனா ராணி, நாட்டியக் கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சுகி சிவத்திற்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் வாணி ஜெயராமிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் சந்திரா தண்டாயுதபாணிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

வில்லிசை கலைஞர் பி.எஸ்.கோமதி, நாடக நடிகை எஸ்.என். பார்வதி உள்ளிட்ட 4 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

Labels:

சென்னையில் தனது உற்பத்தி ஆலையை நிறுவுகிறது அமேசான்

  


சர்வதேச ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், தனது எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் சென்னையில் தொடங்க இருக்கும் இந்த உற்பத்தி ஆலை, இந்தியாவில் அந்நிறுவனம் தொடங்க உள்ள முதல் உற்பத்தி ஆலையாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசான் நிறுவனம் சென்னையில் தயாரிக்கும் பொருட்கள் சந்தைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “சென்னையில், இந்தியாவின் தனது முதல் உற்பத்தி ஆலையை அமேசான் நிறுவனம் தொடங்க இருக்கிறது. இந்த தகவலை அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் அகர்வால் மூலம் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், அமேசான் நிறுவனம் சென்னையில் அமைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும் என்றும் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Labels:

புதுச்சேரியில் 7ஆவது முறையாக அமலானது ஜனாதிபதி ஆட்சி!

  


புதுச்சேரி அரசியலைப் பொறுத்தவரையில் அங்கே முதல்வர் நாற்காலி இதுவரை சுழல் நாற்காலியாகவே அமைந்துள்ளது. அதற்கு நாராயணசாமியும் விதிவிலக்கல்ல. ரெங்கசாமியைத் தவிர்த்து யாரும் 5 ஆண்டு காலம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்ததில்லை.

கூடவே மற்றொன்றையும் புலப்படுத்துகிறது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி செயல்பட்டதை விட ஜனாதிபதி ஆட்சியே நிறைய முறை அமலில் இருந்திருக்கிறது. இதுவரை அங்கு 6 முறை ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கிறது. 1968இல் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் 1974இல் இரு முறை, 1978,1980 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறையும் 1990ஆம் ஆண்டில் முடிவுற்றது. தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். 

இதையடுத்து பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக-என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த நேற்று ஒப்புதல் அளித்தது. இச்சூழலில் தற்போது இருந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தான் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

Labels:

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

 


 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் தற்பொழுது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தற்பொழுது விண்ணில் ஏவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 -ல் உள்ள சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பகவத்கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த ராக்கெட்டில் அமேசான் காட்டை குறித்து ஆராய்வது தொடர்பான 'அமேசானியா-1' என்ற பிரேசில் செயற்கைகோள், பாதுகாப்பு படையினர் பயன்பாட்டுக்காக இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் முதல் கட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

637 கிலோ எடை கொண்ட பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைகோளின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அதேபோல் இந்த ராக்கெட்டில் சென்னை, கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

Labels:

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய

 

 
 செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய காணொலியை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது விண்வெளி பயணத்தை தொடங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த வியாழன் அன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த நிலையில்,பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் இறங்கிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

இத்துடன் பெர்சவரன்ஸ் விண்கலம் பல்வேறு கோணங்களில் செவ்வாய் நிலப்பரப்பை எடுத்த பல்வேறு புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும் அங்கிருந்த மண் மற்றும் கற்களை பூமிக்கு கொண்டு வரவும் பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. இது அடுத்த 2 ஆண்டுகள் செவ்வாய் கோளை சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels:

உலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்

  

 
உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Labels:

உலகிலேயே மிகவும் சிறிய ஊர்வன வகை உயிரினம் கண்டுபிடிப்பு ..!

 


ர்வன வகை உயிரினங்களிலேயே மிகவும் சிறிய உயிரினத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மடகாஸ்கர் தீவில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பதிமூன்றரை மில்லிமீட்டர் நீள ஆண் பச்சோந்தியையும், 22 மில்லிமீட்டர் நீள பெண் பச்சோந்தியையும் கண்டு பிடித்தனர்.

அரை இன்ச்க்கும் குறைவாக, சூர்யகாந்தி மலரின் விதை அளவே உள்ள இந்த ஆண் பச்சோந்தி தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள ஊர்வன வகை உயிரினங்களில் மிகவும் சிறியது என அவர்கள் தெரிவித்தனர்.

Labels:

அண்டார்க்டிக்கா அருகே கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு

  


அண்டார்க்டிக்கா கண்டத்தின் அருகில் கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பிரிட்டிஷ் அண்டார்க்டிகா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர். 900 மீட்டர் ஆழத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.அப்போது இதுவரை பார்த்திராத சில வகை பூஞ்சைகளும், சிறிய புழுக்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த வகை உயிரினங்களும், பூஞ்சைகளும் தற்போதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Labels:

இந்தியாவிலேயே முதன் முதலாக மீனவர்களுக்காக பிரத்யேக வானொலி

  


ராமேஸ்வரம் பகுதியில் அன்றாடம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை வெளி உலகத்துடன் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறது “கடல் ஓசை எஃப் எம்” என்ற வானொலி பண்பலை. மீனவர்களின் மேம்பாட்டுக்காக பாம்பன் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வரும் நேசக்கரங்கள் என்ற அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த வானொலி ஒலிபரப்பை, கடலுக்குள் சுமார் 17 நாட்டிகல் வரை கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

Labels:

ஆஸ்திரேலியன் ஓபனில் 9-வது முறையாக ஜோக்கோவிச் சாம்பியன்: 18-வது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றினார்

 


மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைபற்றியுள்ளார்.

ஆடவர்ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தவை வீழ்த்தி ஜோக்கோவிச் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவுக் கட்டத்தைஎட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதிஆட்டத்தில் முதல் செட்டே இருவருக்கும்இடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

 

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிச் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தைக் கைபற்றினார்.

இதன் மூலம் ஜோக்கோவிச் 9-வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார். ஜோக்கோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமைந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வரையில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3-வது இடத்தில் உள்ளார்.

 

Labels:

கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா

 


கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

ஆன்மீக சொற்பொழிவு என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் திருமுருக கிருபானந்த வாரியார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். தந்தையிடம் இருந்து கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக் கொண்ட வாரியார், எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றலை பெற்றார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாக சொற்பொழிவாற்ற தொடங்கி, முருகப்பெருமானின் மகிமையை தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமைக்குரியவர்.

சொற்பொழிவு என்றால் கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டும் நிலையை மாற்றி, குட்டிக்கதைகளோடும், நகைச்சுவையோடும் கிருபானந்த வாரியார் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

500க்கும் அதிகமான ஆன்மீக கருத்துக்களை கொண்ட கட்டுரைகளை இலக்கிய தரத்தோடும், தெளிவான நடையோடும் எழுதிய திருமுருக கிருபானந்த வாரியார் 64ஆவது நாயன்மாராக கருதப்படுகிறார்.

துணைவன், திருவருள், தெய்வம் போன்ற ஆன்மீக திரைப்படங்களிலும் நடித்த வாரியார், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். ஏராளமான கோயில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த கிருபானந்த வாரியார், உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு "பொன்மனச்செம்மல்" என்ற பட்டத்தை கிருபானந்த வாரியார் சூட்டி அழகுபார்த்தார்.


Labels:

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்

 


காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் 62 ஆண்டுகளுக்கு பிறகு நிறை வேறுவதால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி. க்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு வர, அக்காலத்திலேயே புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர்.

1933-ல் புதுக்கோட்டை நிர்வாக அலு வலராக இருந்த டாட்டன் ஹாமின் முயற்சி யால், மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கால் வாய் வெட்டும் பணி ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது.

1954-ல் இத்திட்டம் குறித்து புதுக்கோட்டை எம்.பி. முத்துச்சாமி வல்லத்தரசு நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து 1958-ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

2008-ல் ரூ.3,290 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனுாரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த கால்வாய் கதவணையில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கு திசையில் செல்லும். அதன் பின் வலது பக்கம் திரும்பி தென்மேற்கில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாறில் இணையும். இந்த கால்வாய் தொடக்கத்தில் 20 மீ., அகலம், 5 மீ. ஆழத்தில் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. மேலும் 9 ரயில்வே பாலங்கள் உட்பட 144 பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு,கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். முதற் கட்டமாக 2008 ஜூனில் ரூ.234 கோடியில் மாயனுார் கதவணை அமைக்கப்பட்டு, 2014 ஜூன் 25-ல் திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். கதவணை திறந்தபிறகு கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை.

அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் நிதி கோரியும் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசே நிதி ஒதுக்கி காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் போராடி வந்தனர். இந்நிலையில் இத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி யில் செயல் படுத்தப் போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக ரூ.700 கோடியை அரசு ஒதுக்கியது. புதுக் கோட் டை, கரூர் மாவட்டங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 11 கி.மீ.க்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ரூ. 331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை குன் னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்தினால் வறட்சியை தடுக்கலாம். கடந்த காலங்களை போல் அறிவிப்போடு போகாமல், மத்திய அரசு நிதி உதவி அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். நீர் பங்கீட்டு முறையையும் வரையறுக்க வேண்டும் என்று கூறினார்.

பயன்பெறும் வட்டங்கள்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம்.
திருச்சி : திருச்சி, ஸ்ரீரங்கம்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில்.
சிவகங்கை : காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர், சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி.
ராமநாதபுரம் : திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம்.
விருதுநகர்: திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை தாலுகாக்கள்.
துாத்துக்குடி: விளாத்திக்குளம் தாலுகா.

Labels:

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரி

ஆசியாவிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் கால்நடை பூங்காவை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் விருத்தாசலம் கூட்டுரோட்டில் நிறுவியுள்ளது தமிழக அரசு. இந்த பூங்காவானது 1,002 ஏக்கர் பரப்பளவில் 1022 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் உருவாகி வருகிறது.


 

கால்நடை பூங்காவின் முக்கிய அங்கமாகக் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் துவக்கி வைத்த பின்பு, அதில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த கால்நடை பூங்கா குறித்து தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கறவை மாடுகளின் எண்ணிக்கை 7.4 சதவிகிதமும், வெள்ளாடுகள் 17 சதவிகிதமும், கோழிகளின் எண்ணிக்கை 2.84 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளும், ஒரு கோழி மருத்துவ ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகின்றன. புதியதாக, உடுமலைப்பேட்டையிலும், தேனியிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரே ஆண்டில் இங்கு கால்நடை மருத்துவ கல்லூரியும், ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ளது போன்று அனைத்து வசதிகளும் உள்ளன" என்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ மாட்டுப்பண்ணையில் ஒரு பசு மாடு ஒரு நாளைக்குச் சராசரியாக 65 லிட்டர் பால் கொடுக்கிறது. நம் ஊரில் கலப்பின பசுக்கள் மிகக் குறைந்தளவே பால் கொடுக்கின்றன. குறைந்தது 35 முதல் 40 லிட்டர் பால் தரும் மாடுகளை நாம் உருவாக்கினால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். அதிக பால் தரும் கலப்பின மாடுகளை உருவாக்கவும், அதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியே இந்த கால்நடை பூங்காவின் முதன்மையான நோக்கமாக இருக்கும். இந்த கால்நடை பூங்காவுக்குத் தேவையான நீரைக் காவிரி ஆற்றிலிருந்து 260 கோடி ரூபாய் செலவில் தனியே பைப்லைன் மூலம் கொண்டு வரப்படுகிறது" என்றார்.

கால்நடை பூங்காவின் சிறப்பம்சம் என்ன?

"புதிய கால்நடை பூங்காவானது கால்நடை அறிவியல் கல்வி மட்டுமல்லாது விரிவாக்கப் பணிகளையும் பெருமளவில் மேற்கொள்ளும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களையும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களின் ஒருங்கிணைந்த இணைப்பு மையமாகவும் செயல்படும்" என்கிறார் கால்நடைத் துறையின் முதன்மைச் செயலர் கோபால்.

இவர், "இங்கு உயர் ரக கலப்பின பசுக்களை உற்பத்தி செய்தல், அதி நவீன ஆராய்ச்சி கூடங்கள் அமைத்தல், கால்நடைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கான ஆய்வுகளையும், கருவிகளையும் மேம்படுத்துதல், கால்நடை அறிவியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வெளிநாட்டுக்கு இணையான கல்வியை வழங்குதல் உள்பட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இந்த கால்நடை பூங்கா வடிவமைப்பைப் பெற்றுள்ளது

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், " தற்போது சத்தியமங்கலத்தில் உள்ள காங்கேயம் காளை ஆராய்ச்சி மையம் மற்றும், உம்பளச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணையும் கால்நடை பூங்காவில் அமைய உள்ளது. மேலும், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி இனங்களின் பிரிவுகளுக்கான ஏற்படுத்தப்பட்டுள்ளன " என்றார்.

இங்கு, விவசாயிகள் நேரடியாகக் கலப்பின ரக மாடுகளையும், கன்றுகளையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த பூங்காவிலேயே ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த ஆராய்ச்சிகளும், பயிற்சி வழங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக, தனித்தனியே மிகப்பெரிய அளவில் கட்டட வசதிகளும், ஆய்வக வசதிகளும் உள்ளன.

பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைப் பாதுகாத்துப் பதப்படுத்துதல், அவற்றிலிருந்து உபபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளத் தனிப்பிரிவுகள் உள்ளன.

தற்போது தொடங்கப்பட்டுள்ள கால்நடை கல்லூரிக்கு தேவையான நவீன வகுப்பறைகள், நூலகம், எட்டு கல்விசார் கட்டிடங்கள், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை சிகிச்சையியல் துறை, கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, கால்நடை மருந்தியல் துறை, கால்நடை உணவியல் துறை, இனவிருத்தி துறை, நுண்ணுயிரியல்துறை, விரிவாக்க மையம், மாணவர் விடுதி, ஆசிரியர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, பால் வள அறிவியல் வளாகம், இறைச்சி அறிவியல் வளாகம், கால்நடை பண்ணை வளாகம், உணவகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 ஒட்டுமொத்த பார்க்கையில் இந்த கால்நடை பூங்காவானது ஒருங்கிணைந்த மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகவே காட்சியளிக்கிறது.

 

 

Labels: