Sunday, February 28, 2021

கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழா

 


கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

ஆன்மீக சொற்பொழிவு என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் திருமுருக கிருபானந்த வாரியார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தார். தந்தையிடம் இருந்து கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக் கொண்ட வாரியார், எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றலை பெற்றார். பதினெட்டு வயதிலேயே சிறப்பாக சொற்பொழிவாற்ற தொடங்கி, முருகப்பெருமானின் மகிமையை தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமைக்குரியவர்.

சொற்பொழிவு என்றால் கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டும் நிலையை மாற்றி, குட்டிக்கதைகளோடும், நகைச்சுவையோடும் கிருபானந்த வாரியார் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

500க்கும் அதிகமான ஆன்மீக கருத்துக்களை கொண்ட கட்டுரைகளை இலக்கிய தரத்தோடும், தெளிவான நடையோடும் எழுதிய திருமுருக கிருபானந்த வாரியார் 64ஆவது நாயன்மாராக கருதப்படுகிறார்.

துணைவன், திருவருள், தெய்வம் போன்ற ஆன்மீக திரைப்படங்களிலும் நடித்த வாரியார், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். ஏராளமான கோயில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த கிருபானந்த வாரியார், உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு "பொன்மனச்செம்மல்" என்ற பட்டத்தை கிருபானந்த வாரியார் சூட்டி அழகுபார்த்தார்.


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home