Sunday, February 28, 2021

7 சமூக பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்

 


தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மீதான சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற ஏழு சமூகப்பிரிவுகளை இனி, ‘தேவேந்திரகுல வேளாளர்’ எனும் பெயரில் அழைப்பதற்கான ஷரத்து இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவை ஒரேசமூகத்தின் ஏழு பிரிவுகள் எனவும், இவற்றை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்றும் அச்சமூகத்தின் பெரும்பாலானவர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதை முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முறைப்படி பரிசீலித்து 7 பிரிவுகளையும் தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயரில் ஒரே சமூகமாக மாற்ற முடிவு செய்தது. பிறகு இதற்கான சட்டதிட்ட விதிமுறைகளின்படி அதை ஏற்று சட்டத் திருத்தம் செய்ய தமிழக அரசு, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு பரிந்துரைத்தது.

இதை அத்துறையின் சார்பில்பரிசீலித்த மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அதற்கான அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றார்.

இது, நேற்று மக்களவையில் சட்டத் திருத்த மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைமத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சரான கிருஷண் பால் தாக்கல் செய்தார்.

நேற்றுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் முடிவு பெற்றது. இதைத் தொடர்ந்து மக்களவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 8-ல் துவங்கும்போது இந்த சட்டத் திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தகவலை இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், கடந்த 2007 முதல் எழுப்பப்பட்டு வரும் இந்தக் கோரிக்கை மத்திய, மாநிலஅரசுகளின் முறையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் இருந்துள்ளது.

அவர்களிடம் இதை மதுரையிலுள்ள தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளையின் தலைவரான எம்.தங்கராஜ் தமது சமூகம் சார்பில் முதன்முதலாக எழுப்பியுள்ளார்.

பிறகு இவர், கடந்த ஆகஸ்ட் 6, 2016-ல் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்துள்ளார். தொடர்ந்து அவர், அச்சமூகத்தினர் நூறு பேருடன் செப்டம்பர் 16, 2016-ல் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த மசோதாவின் அறிமுகம் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home