பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது..!
அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த மாநாட்டின்போது சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எரிசக்தி மாநாடு (செராவீக் 2021) காணொலி வாயிலாக நாளை தொடங்குகிறது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது வழங்கப்பட உள்ளது.
"பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்களை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறார். 50 கோடி இந்தியர்கள் பயன் அடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 35 கோடி ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
அமைப்புசாரா துறையை சேர்ந்த 42 கோடி பேர் பயன் அடையும் வகையில் ஓய்வூதிய திட்டம், இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், 18,000 குக்கிராமங்களுக்கு மின்சார வசதி, ஏழை குடும்பங்களுக்கு 1.25 கோடி வீடுகள், விவசாயிகளுக்கு நிதியுதவி, மின்னணு வேளாண் சந்தை, தூய்மை இந்தியா திட்டம், நீர்வழிப் போக்குவரத்து, உதான் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்.
சர்வதேச எரிசக்தி உற்பத்திக் கூடமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். பருவநிலை மாறுபாட்டை தடுக்க உறுதி பூண்டுள்ளார். அவரது முயற்சியால் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உதயமாகியுள்ளது" என்று செராவீக் 2021 எரிசக்தி மாநாடு அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது.
எரிசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்ற உள்ளார். அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர், அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்பு பிரதிநிதி ஜான் கெர்ரி, கொலம்பிய அதிபர் இவான் டுகே மார்கஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
Labels: Award
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home