இனி Geospatial data- வை இந்திய தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தலாம்
இந்தியாவில் புவியிடம் சார் தகவல்களைச் சேகரிப்பது (Geospatial Data) தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கடந்த திங்களன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சீர்திருத்தங்களை வெளியிட்டுள்ளது.
புவியிடம் சார் தகவல்கள் சேகரித்தல் மற்றும் வரைபடமாக்கல் ஆகியவற்றிலிருந்து வருகிற கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதனை இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பூமியில் உள்ள ஓர் இடம் மற்றும் அதனைச் சேர்ந்த தகவல்கள் யாவுமே புவியிடம் சார் தகவல்களாகவே கருதப்படுகின்றன. அதாவது சாலைகள், கட்டடங்கள், கட்டடங்களுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்கள் என ஓர் இடத்தையும் அதனைச் சேர்ந்து வரும் தகவல்கள் யாவும் புவியிடம் சார் தகவல்களே! பொதுவாகச் சாலைகள், ரயில் பாதைகள், கட்டடங்கள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை புவியிடம் சார் தகவல்களுக்குள் அடங்கும்.
இதுவரை வரைபடமாக்கவும் புவியிடம் சார் தகவல்களைச் சேகரிக்கவும் பாதுகாக்கவும் பல்வேறு துறைகளிடம் அனுமதி வாங்கி செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த செயல்முறையில் அனுமதி பெறப் பல மாதங்கள் ஆகிவிடும். எனவே, சிறிய தொழில் நிறுவனங்கள் யாவும் இந்தப் புவியிடம் சார் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் வரைபடமாக்கலில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. கூகுள் நிறுவனத்தின் திட்டமான கூகுள் ஸ்ட்ரீட் வ்யூ (Google Street view)-க்கும் அனுமதியை மறுத்திருந்தது இந்திய அரசு. உள்நாட்டு பாதுகாப்பை மனதில் கொண்டே வரைபடமாக்கல் மற்றும் புவியிடம் சார் தகவல்கள் தொடர்பான செயல்களில் அரசே முழுமையாகக் கையாண்டு வந்தது.
புவியிடம் சார் தகவல்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சேவைக்கான அனுமதியைப் பெற்ற பின் அந்தக் குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே கையாள வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் இருந்து வந்தன.
இந்தியாவில் நிலைமை இப்படி இருந்தாலும், உலகளவில் புவியிடம் சார் தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 'Countries Geospatial Readiness Index', புவியிடம் சார் தகவல்களைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கும் நாடுகள் குறித்த ஆய்வில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஜெர்மன், நெதர்லாந்து, கனடா, டென்மார்க், சீனா, சிங்கப்பூர், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நிலையில்தான் புவியிடம் சார் தகவல்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். இந்த அறிவிப்பைப் பிரதமர் மோடியும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த அறிவிப்பின்படி இந்தியாவில் இருக்கும் எந்த ஓர் அரசு அல்லது தனியார் நிறுவனமும், எந்த ஒரு தனி நபரும் வரைபடமாக்கல் மற்றும் புவியிடம் சார் தகவல்களை உருவாக்கவும், சேகரிக்கவும், அதனைப் பாதுகாக்கவும், பயன்படுத்திக் கொள்ளவும், வரைபடங்களை உருவாக்கிக் கொள்ளவும் அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Survey of India-வின், Continuously operating reference stations-ன் தரவுகளையும் மற்ற நிறுவனங்கள் எந்தத் தடையும் இன்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வரைபடங்களை உருவாக்கலாம், புவியிடம் சார் தகவல்களையும் சேகரிக்கலாம். ஆனால், அப்படி சேகரிக்கப்படும் தரவுகள் யாவும் இந்திய எல்லைக்குள் மட்டுமே வைத்து பராமரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவை அனைத்தும் இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே என்பதையும் அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்.
மத்திய அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் வரவேற்பைத் தெரிவித்திருக்கின்றன. இந்த முடிவின் மூலம் இந்தத் துறையில் பல புதிய முதலீடுகளும், புதிய வேவை வாய்ப்புகளும் உருவாகும். கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளிலும் புவியிடம் சார் தகவல்கள் என்பது அவசியமான ஒன்றாகிறது. தனியார் நிறுவனங்களும் இந்தத் துறையில் நுழைவதன் மூலம் வேகமாகவும், துல்லியமாகவும் வரைபடமாக்கல் துறை வளர்ச்சி பெரும். உலகளவில் நானோ டெக்னாலஜி மற்றும் பயோ டெக்னாலஜிக்கு அடுத்த படியாக வளர்ந்து வரும் துறையாக ஜியோஸ்பேசியல் டெக்னாலஜி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home