Sunday, February 28, 2021

அசாம், மேகாலயாவை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலம்

 


அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக ரூ.3,231 கோடி மதிப்பில் மகாபாகு- பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் அசாமின் நேமதி, மஜூலி ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 420 கி.மீ. தொலைவு, 12 கி.மீ. தொலைவாக குறையும். இந்த நீர்வழி போக்குவரத்து திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளும் இணைக்கப்படும். இத்திட்டத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி வர்த்தக போக்குவரத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 19 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக அமையும்.

மேலும் அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான 8 கி.மீ.தொலைவு பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அசாமின் பிரம்மபுத்திரா நதிநாகரிகம் மிகவும் பழைமையானது. இங்கு பல்வேறு இனமக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். பிரம்மபுத்திரா வெறும் நதிமட்டுமல்ல. வடகிழக்கின் அடையாளம்.

மகாபாகு - பிரம்மபுத்திரா திட்டத்தின் மூலம் வடகிழக்கு முழுவதும் நீர்வழி போக்குவரத்தால் இணைக்கப்படும். துப்ரி - புல்பரி பாலத்தால் அசாமும், மேகாலயாவும் இணைக்கப்படும். இதன்மூலம் இரு மாநில மக்களும் பயன் பெறுவார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், கடந்த கால ஆட்சிகளில் அசாம் புறக்கணிக்கப்பட்டது. இது வரலாற்று தவறு ஆகும். அந்த தவறு பாஜக ஆட்சிக் காலத்தில் சரி செய்யப்படுகிறது. மஜுலி நகரம் மாவட்டமாக தரம்உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் என்ற பெருமையை மஜுலி பெற்றுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அசாமில் முதல்வர் சர்வானந்த சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வரும் ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home