Sunday, January 24, 2021

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்

 அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் வி சாந்தா இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 93.

மருத்துவ சேவைக்காக அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் வென்றுள்ளார். அவர் தனக்கு விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காகவே செலவு செய்தவர்.

டாக்டர் சாந்தா சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் (Cancer) நிறுவனத்தில் ரெசிடெண்ட் மருத்துவ அதிகாரியாக சேர்ந்தார். அதன் பின்னர், புற்றுநோயியல் துறையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.


 

பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்ற நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பத்தில் 1927 இல் சாந்தா பிறந்தார். அவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1949 இல் எம்.பி.பி.எஸ் முடித்து, மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணத்துவம் பெற்றவர்.

1954 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் பெண் மருத்துவ பட்டதாரிகளில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்ட அடயார் புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தா சேர்ந்தார். மருத்துவத்தில் தனது பி.ஜி-ஐ முடித்ததார். 1960 களில் டொராண்டோ மற்றும் இங்கிலாந்தில் (England) மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையிலும் அவர் பயிற்சி பெற்றார்.

1954 ஆம் ஆண்டில் 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட அடையார் கேன்சர் நிறுவனம், இப்போது 423 படுக்கைகள் கொண்டு நவீன வசதிகளுடன் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராய் பொறுப்பேற்ற டாக்டர் ஷாந்தா இங்கு பல நவீன வசதிகளைக் கொண்டு வந்தார். நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றனர்.

விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் டாக்டர் சாந்தவின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் மருத்துவ உயர் கல்வி பட்டமும் பெற்ற டாக்டர் சாந்தா அடையாறு மருத்துவமனையில் தனது மருத்துவ பணியை துவங்கினார்.

அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவரது பங்கு அளப்பறியது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

Labels:

உத்தரகண்ட் ;ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி!!

 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார்..!

தேசிய பெண் குழந்தை தினத்தை (National Girl's Day) முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி (Srishti Goswami), BJP ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று செயல்பட உள்ளார். அவர் டேராடூனில் நடைபெறும் குழந்தை சட்டசபை அமர்வில் பங்கேற்பார். இந்தியாவின் பல பகுதிகளில், சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், MP போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கௌரவிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால், ஒரு நாள் முதல்வராக யாரும் இதுவரை இருந்ததில்லை. 

இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்டில் இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. ஹரித்வார் மாவட்டத்தின் (Haridwar district) தவுலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி B.Sc Agriculture படித்து வருகிறார். அவரது தந்தை கிராமத்தில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி தொழிலாளி. 19 வயதான அவர் 2018-ல் உத்தரகண்ட் சிறுவர்கள் சட்டசபையின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க ஷிருஷ்டி கோஸ்வாமி  தாய்லாந்து சென்றார். 


இது குறித்து சிருஷ்டி கூறுகையில்., இதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன். இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார். இந்த ஒரு நாளில் அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம் (Atal Ayushman Scheme), ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.


Labels: ,

Wednesday, January 20, 2021

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்

 


அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ஜேனட் ஏலன் (வயது 74) நிதியமைச்சராக நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க நிதியமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் செனட் அவையில் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்திய வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நிதியமைச்சராக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்க நிதியமைச்சராகப் பொருளாதார வல்லுநர் ஜேனட் ஏலன் முறைப்படி விரைவில் பதவி ஏற்பார். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கேபினட் அமைச்சராக ஏலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்ஸும், பாதுகாப்புத் துறை அமைச்சராக லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக டோனி பில்கின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் ஏலன். பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பாடம் நடத்தியுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் ஏலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும் அதைக் குடியரசுக் கட்சியினரும் வரவேற்றனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.

2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். ட்ரம்ப் ஆட்சியில் ஜேனட் ஏலனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

 

Labels: ,

Sunday, January 10, 2021

மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக மிதக்கும் ரயில் சீனாவில் அறிமுகம்

 


சீனாவில் அடுத்தகட்ட சாதனை யாக அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்துள்ளனர். காந்த இயக்கவியல் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு ஜியோ தாங் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் இந்த ரயிலை வடி வமைத்துள்ளனர்.

உயர் வெப்ப சூப்பர்கண்டக்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ரயில் தாண்டவாளங்களில் தொட்டுச்செல்லாமல் மிதந்தபடி அதிவேகமாகப் பயணிக்கக் கூடியது. இந்த ரயிலில் சக்கரங்கள் இல்லாததால் உராய்வு மிகவும் குறைவாகவே இருக்கும். காந்தமயப்படுத்தப்பட்ட தாண்ட வாளத்தின் மீது இந்த ரயில் காற்றில் மிதந்தபடி வேகமாகப் பயணிக்கும்.

தற்போது இதன் 69 அடி நீள மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ள ஆராய்ச்சியாளர்கள், அடுத்த மூன்று முதல் 10 ஆண்டுகளுக்குள் இது முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார்கள். இந்த ரயில் மணிக்கு 620 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதன் மூலம் பயணித்தால் லண்டனிலிருந்து பாரீஸுக்கு 47 நிமிடங்களில் போய்விடலாம்.

இந்நிலையில் மேலும் இந்த ரயிலை மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கும் முயற் சிகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுவருவதாகக் கூறி னார்கள்.சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிதக்கும் ரயில்.

Labels: ,

Friday, January 8, 2021

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்

 


வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய கணக்கீடு தெரிவிக்கிறது.

ஒரு நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் மெக்ஸிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்நாடுகளில் பிறந்த ஒருகோடியே 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரிசையில் சீனாவில் பிறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் 2020 பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 35 லட்சம் இந்தியர்களும், அமெரிக்காவில் 27 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 25 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். தவிர ஆஸ்திரேலியா, கனடா, குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த 2000-வது ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் மக்கள் புலம் பெயர்வது அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிரியா,வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்கா மீது ஆர்வம்

உலக நாடுகளில் பெரும்பாலானோரை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. 2020-ம் ஆண்டில் 5 கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது மொத்தமாக புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதமாகும்.

Labels:

Sunday, January 3, 2021

அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்


 

ஒரு நாடு மற்றொரு நாட்டில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த இந்தியா  பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங் கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும் - பாகிஸ்தானும் ஆண்டுதோறும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1992-ம் ஆண்டுஜனவரி 1 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை நேற்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்தியவெளியவுறவுத் துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைஅமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன.

Labels: ,