Sunday, February 28, 2021

புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

  


 

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியி துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்றார்.

குடியரசு தலைவரின் அறிவிப்பை தலைமை செயலர் படித்தார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடரந்து, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா காலை 9.05 மணிக்கு துவங்கி 9.12 க்கு முடிவடைந்தது. பின்னர் காவல்துறையின் மரியாதையை ஏற்றார்.

இன்று பதவி ஏற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநர் ஆவர். 5 வது பெண் துணை நிலை ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Labels:

Tuesday, February 23, 2021

இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவராக அஜய்சிங் மீண்டும் தேர்வு

 



இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குருகிராமில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் கொரோனா பரவலால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன பார்வையாளர் யுரி ஜாய்ட்செவ் முன்னிலையில் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தொழிலதிபர் அஜய்சிங் 37-27 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்ற மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆஷிஷ் சிலாரை தோற்கடித்து மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்றினார்.

பொதுச்செயலாளராக அசாமைச் சேர்ந்த ஹேமந்த குமார் கலிதா தேர்வானார். பின்னர் பேட்டி அளித்த அளித்த அஜய்சிங், இந்தியாவில் பெண்கள் குத்துச்சண்டை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தள்ளிவைக்கப்பட்ட ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் கூறினார்.

Labels: ,

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்

 



இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டத்தில் ஜெய் ஷா தலைவராக தேர்வாகியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு வயது 32. 

“இந்த பொறுப்புக்கு நான் தகுதியானவர் என்று கருதி எனது பெயரை பரிந்துரைத்த சக பிசிசிஐ உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஒழுங்கமைக்கவும், அபிவிருத்தி செய்யவும், ஊக்குவிக்கவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சீராக வளர்ச்சியடைந்துள்ளது. பெரிய நாடுகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து வருகிறது இந்த கவுன்சில். ஒரு முழுமையான வளர்ச்சி இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். 

24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த கவுன்சிலின் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

Labels: ,

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்



தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து சண்முகம் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.



மத்திய அரசின் மீன்வளம்,  கால்நடை பால்வள அமைச்சக அலுவலக செயலாளராக பணியாற்றிய  நிலையில் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் ராஜீவ் ரஞ்சன் இருந்துள்ளார்.

Labels: ,

தேசிய சுகாதார ஆணையத்தின் புதிய CEO R.S.ஷர்மா




தேசிய சுகாதார ஆணையத்தின் (NHA)புதிய தலைவராக R.S.ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ( National Health Authority )

Ram Sewak Sharma(R.S.ஷர்மா), இவர் முன்னாள் TRAI அமைப்பின் தலைவராக இருந்தவர்

NHA - இது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு, ஆயுஸ்மான் - பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை செயல்படுத்துவது இதுவே.

Labels: ,

Wednesday, January 20, 2021

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்

 


அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ஜேனட் ஏலன் (வயது 74) நிதியமைச்சராக நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.

அமெரிக்க நிதியமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் செனட் அவையில் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நடத்திய வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நிதியமைச்சராக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்க நிதியமைச்சராகப் பொருளாதார வல்லுநர் ஜேனட் ஏலன் முறைப்படி விரைவில் பதவி ஏற்பார். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கேபினட் அமைச்சராக ஏலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்ஸும், பாதுகாப்புத் துறை அமைச்சராக லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக டோனி பில்கின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் ஏலன். பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பாடம் நடத்தியுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.

அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் ஏலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும் அதைக் குடியரசுக் கட்சியினரும் வரவேற்றனர்.

அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.

2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். ட்ரம்ப் ஆட்சியில் ஜேனட் ஏலனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

 

Labels: ,

Thursday, December 24, 2020

ISRO தலைவர் சிவனின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு..!!

தமிழகத்தை சேர்ந்த கே.சிவன், (K.Sivan) இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிறுவனத்தில் விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர், பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் செலுத்துவதில் முக்கியப் பணி ஆற்றினார். இந்தியாவிலிருந்து கடந்த 33 ஆண்டுகளாக ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் கே.சிவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். 

 கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கே.சிவன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, அவர் 2022 ஜனவரி 14ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார். 

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவின் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப்பணியில், கே.சிவன் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது உட்பட விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ தலைவர் கே.சிவன், சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

Labels: , ,

Tuesday, December 22, 2020

நாட்டின் இளம் மேயர்; 21 வயதில் திருவனந்தபுரம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்பு


 

கேரளாவின் மிகப்பெரிய நகராட்சியான திருவனந்தபுரம் கார்ப்பரேஷனின் இளைய மேயராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று பதவியேற்றார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கின. திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.

முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்யா, இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்தார்.

டிசம்பர் 25-ம் தேதி, நடைபெற்ற மாவட்ட செயலகக் கூட்டத்தில் அவரை மேயராக்க சிபிஎம் முடிவு செய்தது. 100 உறுப்பினர்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 54 வாக்குகளைப் பெற்ற ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராகப் பதவியேற்றார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அரங்கம் கட்டுக்கடங்காமல் நிறைந்திருக்க மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா புதிய மேயருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவரே நாட்டின் இளம் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Labels: ,